சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

422 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

வரலாறு: ஆடைகொணர்ந்த வழி, அவ்வாடை வேண்டாதான் மற்றையது கொணா
என்னும். அஃது அச்சுட்டிய ஆடை ஒழித்து அதற்கு இனமாகிய பிற ஆடை குறித்து
நின்றவாறு காண்க. பெரும்பான்மையும் முதல்நிலையாய் நின்றுஅல்லது
அவ்விடைச்சொல் பொருள் விளக்காமை யின், ‘மற்றையது’ என்பது என்றார்.
சிறுபான்மை மற்றை ஆடை எனத்தானேயும் வரும்.

மற்றையஃது மற்றையவன் என்னும் தொடக்கத்தனவும் அவ்விடைச்சொல்
முதல்நிலை ஆயபெயர். 18
 

விளக்கம்
 

மற்று பெயரும் வினையும் சார்ந்துவரும். மற்றை பெயரையே சார்ந்துவரும்.
இவ்வேறுபாடு அறிக. இதற்கு நன்னூல் விருத்தி கூறும் உரையின் பொருத்தமின்மையும்
அறிக.
 

ஒத்த நூற்பாக்கள்:
 

  ‘மற்றையது என்னும் கிளவி தானே
சுட்டுநிலை ஒழிய இனங்குறித் தன்றே.’

தொல்.சொல். 264

  முழுதும்

நன்.434, மு.வீ.ஒ.9


‘கொல் இடைச்சொல்’
 

269. கொல்லே ஐயம் அசைநிலைக் கூற்றே.
 

இது கொல் என்பது பொருள் படுமாறும் அசைநிலை ஆமாறும் கூறுகின்றது.

இ-ள்: கொல் என்னும் இடைச்சொல் ஐயப்பொருண்மை குறித்து நிற்றலும்
அசைநிலை ஆதலும் என்னும் இரு பகுதித்தாம் என்றவாறு.