ஆகுபெயருள் பல வகைகள் உள. அவற்றை முற்ற உணர்த்துவது ஒருவருக்கும் இயலாதது. அப்பரந்துபட்ட நிலையது ஆகிய ஆகுபெயருள் எதனையும் அடக்கலாம். எல்லாவற்றையும், ஆகு பெயருள் அடங்கும் எனப் பொதுவாகக் கூறாது, தனித்தனியே விதத்து குறிப்பு மொழியாகவற்றை விளக்குவதே ஏற்புடைத்து. நன்னூலார் மரபை அடியொற்றி முதற்குறிப்பைக் குறிப்புமொழி என்று கோடற்கண் குற்றம் என்ன? எழுத்தும் அவ்வச்சொல்லிலுள்ள எழுத்தாகலான், தனி எழுத்தைக்கூறாது சொல்லகத்துள்ள எழுத்தை அடியொற்றிக் கூறிய குறிப்பும் குறிப்பின் தருமொழி ஆதற்கண் இழுக்கு எதுவும் இன்று. இவற்றுள் ஒன்றனை மறுப்பார்போல் பிறிதொன்றனை ஏற்றுப் பரிந்துரைப்பதும் வேண்டுவதன்று. |