சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-2491

துணிந்தவழி அன்மைச்சொல் ஒருபொருள் மேல் ஒருபொருள்அன்றாந்தன்மையை
மறுக்கப்படும் பொருள்மேலும், தழுவப்படும் பொருள்மேலும்முறையே மறுக்கப்படுதலும்
தழுவப்படுதலும் ஆகிய முகத்தான் கூறுபடச் சுட்டி நிற்றலும்வழுவாகா; வழுவமைதியை
உடையனவாம் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

ஐயப்பொருள் ஆவது சிறப்பு இயல்பால் தோன்றாது பொது இயல்பால்
தோன்றியது. ஏற்புழிக் கோடலான் திணை ஐயத்துக் கண் உருவும், உயர்திணைப்பால்
ஐயத்துக் கண் உருவும் அத்திணைப் பன்மையும், அஃறிணைப்பால் ஐயத்துக்கண்
அத்திணைப்பன்மையும் பொதுப்பெயரும் ஐயப்புலப் பொதுச்சொல் ஆதலும், ‘பால்
மயக்கு உற்ற ஐயப்பொருள்’ எனப் பொதுப்படக் கூறிய அதனால், திணையொடு
ஆண்மை பெண்மை துணிந்த பன்மை ஒருமைப்பால் ஐயமும் அதற்கு அத்திணைப்
பன்மைச் சொல் ஐயப்புலப் பொதுச்சொல் ஆதலும் கொள்க;
 

  ‘கண்டுபால் மயங்கும் ஐயக் கிளவி
நின்றோர் வருவோர் என்றுசொல் நிகழக்
காணா ஐயமும் பல்லோர் படர்க்கை’

 
என்பது அகத்தியம் ஆதலின்.

‘உருவு’ என்றாரேனும், உருவின் பொருள் ஆகிய வடிவு- பிழம்பு- பிண்டம்-
என்னும் தொடக்கத்தனவும் கொள்க.

குற்றி கொல்லோ மகன் கொல்லோ இதோ தோன்றா நின்ற உருவு எனவும்,
ஆண்மகன்கொல்லோ பெண்டாட்டி கொல்லோ இதோ தோன்றாநின்ற உருவு எனவும்,

ஆண்மகன்கொல்லோ பெண்டாட்டி கொல்லோ இதோ தோன்றா நின்ற இவர் எனவும்,