அன்மைச் சொல்லானது தழுவப்படும் பொருள்மேல் ஒருபொருள் ஒருபொருள் அன்றாம் தன்மையைச் சுட்டி நின்றவாறும் காண்க. குற்றி அன்று மகன் என்றவழி மகன் என்பது நின்று வற்றும் எனின், எச்சமாய் நின்ற இவன் என்னும் பெயர் எழுவாய்க்கு அது பயனிலையாய் நிற்றலின் நின்று வற்றுதல் யாண்டையது என்க. அல்லவற்றிற்கும் இவ்வாறே முடித்துக்கொள்க. இனிக் குற்றி அல்லன் மகன் என்புழிக் குற்றி என்பது அல்லன் என்னும் சொல்லொடு இயைந்தவாறு என்னை எனின், இவ்வுருவு குற்றி ஆம் என்றவழி ஆம் என்பதனொடு குற்றி என்பதும் எழுவாயாய் இயைந்தாற்போலக் குற்றி அல்லன் என்புழி ஆம் என்பதன் எதிர்மறையாகிய அன்மைக் கிளவியொடும் குற்றி என்பது எழுவாயாய் நின்றே இயையும் என்க. எழுவாயாய் இயைதலின் அன்றே, யான் நீ அல்லேன் என்புழி நீ என்பது வேற்றுமைக்கு ஏற்ற செய்கை பெறாது நின்றது என்க. இனித் திணை ஐயத்துக்கண் மகன் என்று துணிந்தவழி இவ்வுருவு குற்றி அன்று மகன் என்றும் இவ்வுருவு குற்றி அல்லன் மகன் என்றும், பால் ஐயத்துக்கண் ஆண்மகன் என்று துணிந்தவழி இவ்வுருவு பெண்டாட்டி அல்லள்- இவ்வுருவு பெண்டாட்டி அல்லன்- இவர் பெண்டாட்டி அல்லள்- இவர் பெண்டாட்டி அல்லன் ஆண்மகன் என்றும், பெண்டாட்டி என்று துணிந்தவழி இவ்வுருவு ஆண்மகன் அல்லன்- இவ்வுருவு ஆண்மகன் அல்லள்- இவர் ஆண் மகன் அல்லன்- இவர் ஆண்மகன் அல்லள் பெண்டாட்டி என்றும், |