சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

496 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

சேனாவரையர் ‘உருபு’ என்றே கொண்டார். அச்சொல் வேற்றுமைஉருபு
உவமஉருபு முதலியவற்றை விளக்கும் அன்றி வடிவத்தை உணர்த்தாமையானும்,
‘வினைபயன் மெய் உரு’ என்றாற்போல உரு என்பது நிறத்தை உணர்த்தலானும்,
வடிவத்தை உணர்த்தும் சொல் ‘உருவு’ என்றே நச்சினார்க்கினியர் கொண்டதனை
உட்கொண்டு இவ்வாசிரியரும் வடிவினைக் குறிப்பிட ‘உருவு’ என்ற சொல்லையே
பயனிபடுத்தினார். உருவு என்ற சொல்லையே குறிப்பிடல் வேண்டும் என்று சொல் பற்றி
வரையறை கூறாது ‘உருவு எனமொழியினும்’ எனப் பொருள் பற்றியே வரையறை
செய்தமையால் உருவு என்பதன் பொருளவாகிய வடிவு- பிழம்பு- பிண்டம்- என்றாற்
போல்வனவும் கொள்ளப்படும்.

இவ்வுருவு என்ற சொல்லைக் குற்றி கொல்லோ மகன் கொல்லோ என்ற திணை
ஐயத்தின்கண்ணும், ஆண்மகன் கொல்லோ பெண்மகள் கொல்லோ என்ற
உயர்திணைப்பால் ஐயத்தின்கண்ணும் இவ்வாசிரியர் கொண்டார். நச்சினார்க்கினியர்
இச்சொல்லைத் திணை ஐயம் ஒன்றற்கே கொண்டார். சேனாவரையர் குற்றிகொல்லோ
மகன்கொல்லோ என்ற திணை ஐயத்தின்கண்ணும் ஆண்மகன் கொல்லோ பெண்மகன்
கொல்லோ என்ற உயர்திணைப்பால் ஐயத்தின்கண்ணும் ஒன்றுகொல்லோ பலகொல்லோ
என்ற அஃறிணைப்பால் ஐயத்தின்கண்ணும் உருபு என்ற ஐயப்புலப் பொதுச்சொல்
வழக்கில் வரும் என்றார்.

உருஎன்பதனைக் குற்றிகொல்லோ மகன்கொல்லோ என்ற திணை ஐயத்துக்கே
உரையாசிரியர் கொண்டார்.

உருபு என்பதனையும் அது என்ற அஃறிணை ஒருமைச் சொல்லையும் அவ்வாறு
திணை ஐயத்துக்கண் கொண்டார் தெய்வச்சிலையார்.

நன்னூல் உரைகாரர்கள் உரு என்ற சொல்லைக் குற்றிகொல்லோ மகன்கொல்லோ
தோன்றாநின்ற உரு எனத் திணைஐயத்துக்கே கொண்டனர். நேமிநாத நூலாரும்
அவ்வாறே கொண்டார்.