சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-2499

குற்றி என்பது துணியப்பட்டதாகக் கொள்வோம். அப்பொழுது மகன் என்பது
துணியப்படாத பொருள் ஆகிறது. அத்தன்மையை அச்சொற்கு முடிபாக்கி ‘மகன்
அல்லன் குற்றி’ என்று கூறுவது ஒருமுறை.

துணியப்பட்ட பொருள் குற்றி ஆதலின் அத்துணியப்பட்ட பொருட்கே
அன்மைத்தன்மையை முடிக்குஞ் சொல் விளக்கி ‘மகன் அன்று குற்றி’ என்று கூறுவது
ஒருவகை. உரையாசிரியர், சேனாவரையர், தெய்வச்சிலையார் மூவரும் இவ்விருவகை
முறையையும் குறிப்பிட்டனர். தெய்வச்சிலையார் இருவகையையும் குறிப்பிட்டாரேனும்,
அன்மைக்கிளவி துணியப்படாத பொருட்கண் வருதலே தொல்காப்பியனார் கருத்து
என்பதனை விளக்கினார். குற்றி அல்லன் மகனே எனத் துணியப்பட்ட பொருள்மேல்
அன்மை கூறின், குற்றி என்ற சொல்தான் முடிக்கப்படும் சொல் ஆகவே, தனக்கு
முடிக்குஞ் சொல் இன்றி வற்றும் என்பது அவர் கருத்து. குற்றியல்லன் என்பதனைக்
குற்றியின் அல்லன் மகனே என ஐந்தன் உருபு விரிப்பின் இவ்விடர்ப்பாடு நீங்கும்
என்பர் உரையாசிரியரும் மயிலைநாதரும். இம்முடிபு பொருந்தாது என்பதனைச்
சேனாவரையர் ‘யான் நீ அல்லேன்’ என்ற தொடர் காட்டி, ‘அல்லேன் என்பது யான்
என்பதன் வினை; நீ என்பது அல்லேன் என்பதன் பகுதியாகிய அன்மையைக் கொண்டு
முடிந்தது; ஐந்தன் உருபு தொக்கு நின்றதாயின் யான் நின் அல்லேன் என நீ உருபுக்கு
ஏற்ற வடிவு மாற்றம் பெற்றிருத்தல் வேண்டும்’ என்று மறுப்பார்,

இனி, நச்சினார்க்கினியர் ‘குற்றியோ மகனோ’ என்று ஐயம் நிகழ்ந்தவழிக் குற்றி
என்று துணியப்பட்டதாயின் இவ்வுரு மகன் அன்று குற்றி, என அன்மைச் சொல்லைத்
துணி பொருள் மேல் ஏற்றிக் கூறுக’ என்றார். இவ்வாறே திணைபால் ஐயங்கள்
துணியப்பட்ட நிலைக்கண்,
 

  இவன் பெண்டாட்டி அல்லன் ஆண்மகன்
இவள் ஆண்மகன் அல்லள் பெண்டாட்டி