சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

500 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  இவன் குற்றி அல்லன் மகன்
இவ்வுரு மகன் அன்று குற்றி
இப்பெற்றம் பல அன்று ஒன்று
இப்பெற்றம் ஒன்று அல்ல பல
 
என எடுத்துக்காட்டும் தந்துள்ளார். அன்மைக்கிளவியை மறுக்கப்படும் சொல்மேல் ஏற்றி
‘பெண்டாட்டி அல்லன் ஆண்மகன்’ என எடுத்துக்காட்டுத் தந்தவழி, இவ்வுரு
பெண்டாட்டி அல்லள் ஆண்மகன் என்றோ, இவன் பெண்டாட்டி அல்லள் ஆண்மகன்
என்றோ சொற்கூட்டியே பொருள்முடிக்க வேண்டுதலின் உரு என்பதோ இவன்
என்பதோ அல்லள் என்ற வினைக்குறிப்பொடு பொருந்தாமை அறிக.
துணிப்பொருள்மேல் துணியப்படாத தன்மை இல்லை என்று கூறுதலே ஆசிரியர்
கருத்தாதல் அறிக” என்றார். இதே செய்தியை நன்னூல் விருத்திகாரர் ‘மகன்அல்லன்
குற்றி’ என்றால் ‘மகன் அல்லன்; அவ்வுருக்குற்றி’ என்றே விளக்குதல் வேண்டும்.
ஆண்டுச் சொற்பல்குதல் என்ற குற்றம் நிகழும் ஆதலின், அன்மைத்தன்மையைத்
துணியப்பட்ட பொருள்மேல் ஏற்றி குற்றியோ மகனோ என்று ஐயுற்றவழி மகன் என்று
துணியின் ‘குற்றி அல்லன்’ என்று விடை யிறுத்தலே சாலும்” என்றார்.

நேமிநாத நூலாரும் “அன்மைத்தன்மையைத் துணி பொருள்மேல் வைக்க”
என்றார். நன்னூலார் கருத்தும் அதுவே. முத்துவீரியநூலார் அன்மைத் தன்மையைத் துணியப்படாத பொருள்மேல் வைத்து எடுத்துக்காட்டுக்களும் தந்துள்ளார்.

‘குற்றிகொல்லோ மகன்கொல்லோ’ என்று ஐயுற்றவழிக் குற்றி என்பது
துணியப்பட்டதாயின் அப்பொருள்மேல் அன்மைத்தன்மையை ஏற்றி ‘மகன் அன்று’
என்று சுருங்க விடையிறுத்தலும், இவ்வுரு மகன் அன்று என்று சற்று விளங்க
விடையிறுத்தலுமாகிய ‘மெய்தெரி பொருள்மேல் அன்மை விளம்புதலே’ மிகப்
பொருத்தமாயிருத்தல் காண்க.