துணிந்தவழி அன்மைச்சொல் அன்மைத்தன்மையை மறுக்கப்படும் பொருள்மேலும் மறுக்கப்படும் முகத்தான் சுட்டி நிற்கும் என்றார். குற்றிகொல்லோ மகன்கொல்லோ என்று ஐயுற்றதூஉம் பின்னர் மகன் எனத் துணிந்ததூஉம் தன் முன்னாகக் காணப்படும் பொருளையாம் அன்றே, அங்ஙனம் ஆகவே, வேறுபொருள் அன்றாம் தன்மையை அப்பொருள்மேல் சுட்டிக் கூறுவான் அல்லது வேறுபொருள் மேல் சுட்டிக் கூறுதற்கு ஓர் இயைபு இன்மையின் அது பொருந்தாது என மறுக்க. அல்லதூஉம் குற்றி அன்று மகன் என்றவழி, மகன் என்பது இவன் என்னும் தோன்றா எழுவாய்க்குப் பயனிலையாய் நின்று முடியினும் குற்றியன்று என்பதனொடு இயையாமையின் ‘குற்றியன்று மகன்’ என்பது ஒருதொடர் அன்றாம்; அன்றாகவே, குற்றியன்று ‘என்பது துணிதற்பயன்பற்றி வந்தது அன்றாய் முடிந்தது. முடியவே, ‘குற்றியன்று மகன்’ என்றதனால் வேறுபயன் இன்மையின், அதுவழுவாம் என மறுக்க ஏனை உதாரணங்களும் இவ்வாறே காண்க. |