முதற் பொருள் ஒன்றாயின் ஒருமையானும், பலவாயின் பன்மையானும் முடிதலும் கொள்க. கோடு கூரிது களிறு- குளம்பு கூரிது குதிரை- என அஃறிணைப் பன்மைச் சினைப் பெயர் நின்று முதல் வினையாகிய ஒருமையான் முடிந்தனவும் ஒன்றென முடித்தலால் கொள்க. உடைப்பொருளும் உடையானும்- இடமும் இடத்து நிகழ்பொருளும்- காலமும் காலத்து இயலும் பொருளும்- அவயவமும் அவயவியும்- குணமும் குணியும்- வினையும் வினைமுதலும்- ஆகிய இயைபு உடைமையான், அதுபற்றி உடைப்பொருள் முதலியவற்றின் இயல்பை உடையான் முதலிய பொருள்மேல் ஏற்றி அவற்றின் வினையான் முடிப்பினும் அமையும் எனத் திணைவழு அமைத்தவாறு ஆயிற்று. 3 |