இது மேல் இயற்சொல் என்றதன் இலக்கணம் கூறுகின்றது. இ-ள்: செந்தமிழ் நிலத்தின்கண்ணே வழங்கும் செவ்விய தமிழ்ச்சொல்லாய்ச் சொல்லானும் பொருளானும் திரிபு இன்றி அச்செந்தமிழ் நிலத்தார்க்கும் ஏனைக் கொடுந்தமிழ் நிலத்தார்க்கும் ஒப்பத் தனது பொருளினை விளக்கும் இயல்பை உடையது இயற்சொல்லாம் என்றவாறு. இயல்பாகிய சொல் இயற்சொல் என்க. அவை நிலம்-நீர்-தீ- வளி- சோறு- கூழ்- பால்- மக்கள்- மரம்- தெங்கு- கமுகு என்றாற்போல்வன எனக்கொள்க. செந்தமிழ் நிலமாவது வையை யாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் ஆம். 14 |