சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-4511

எனவும் தலைமைப் பொருளையும் தலைமைஇல் பொருளையும் விராய் எண்ணித்
தலைமைப்பொருட்கு வினைகொடுப்பவே தலைமைஇல் பொருளும் உடன் முடிந்தன
ஆவதொரு முறைமை பற்றி வருவனவும் ஈண்டு ஒன்றென முடித்தலான்
அமைத்துக்கொள்க. ‘தானும் தன்புரவியும் தோன்றா நின்றனன்’ என்பதும் அது. 4
 
விளக்கம்
 

திங்களும் சான்றோரும் ஒப்பர்- திங்கள் பொருளால் உயர்திணை ஆயினும்
சொல்லால் அஃறிணை. இப்பாடலில் திங்களினும் சான்றோர் மேம்பட்டாராய்க்
குறிக்கப்பட்டுள்ளனர். ஆகவே தலைமை பற்றிய சான்றோருக்கு உரிய உயர்
திணைவினையே திங்களுக்கும் வினையாகக் கொள்ளப்பட்டது.

பசு, விட்டான், எருது- என அஃறிணைச்சொல் இரண்டும் உயர்திணைச்சொல்
ஒன்றும் எண்ணப்பட்டும், அவ் அஃறிணைச் சொற்கள் ஆகுபெயரால் உயர்திணையைச்
சுட்டலின் விட்டான் என்ற உயர்திணைப் பெயரோடுகூடி மூவர் என்ற உயர்திணைப்
பெயரைத் தொகையாகக் கொண்டன.

வேந்தன் பெரும்பதி மாந்தர் என்ற தொடரில் உயர் திணைப்பெயர் இரண்டும்
அஃறிணைப் பெயர் ஒன்றுமாக இருப்பதனால், பன்மைபற்றி அச்சொற்கள்
உயர்திணைவினை கொண்டன.

‘தன்பால் மனையாள்’ என்ற பாடலில் பசு என்ற பெயரே அஃறிணை; ஏனைய
பலவும் உயர்திணைப் பெயர்.

‘பார்ப்பார் அறவோர்’ என்ற பாடலில் பசு, குழவி என்ற இரண்டு பெயர்
அஃறிணை; ஏனைய பெயர்கள் உயர்திணை. ‘பார்ப்பார் தவரே’ என்ற பாடலில் பசு
என்ற ஒரு பெயரே அஃறிணை; ஏனைய உயர்திணை. இவை திணைவிராய் மிகுதிபற்றி
உயர்திணைவினை கொண்டவாறு.