பாணன் பறையன் துடியன் கடம்பன் என்ற நான்கு உயர்திணைச் சொற்களும் நால்வர் என்ற உயர்திணைத் தொகைப்பெயர் கொள்ளாது ‘நான்கு’ என்ற அஃறிணைத் தொகை பெற்றதன் காரணம், ஈண்டு எண்ணப்பட்டன பாண்குடி- பறையக்குடி- துடிக்குடி- கடம்பக்குடி- என்ற குடிகளே என்பது சேனாவரையர் உரைகொண்டு விளக்கப்பட்டது. நச்சினார்க்கினியர் இவை உயர்திணைப்பொருள் நின்று அஃறிணை முடிபு பெற்றனவேயாம் என்பர். தண்ணளி- தாம்- தேர்- என்ற மூன்று சொற்கள் விட்டனர் என்ற உயர்திணை வினைகொண்டதும், தான்- தேர் - பாகன் என்ற மூன்று சொற்களும் உண்டான் என்ற உயர்திணை வினை கொண்டதும், தான்- தேர்- என்ற இரு சொற்கள் தோன்றாநின்றனன் என்ற உயர்திணை வினை கொண்டதும், தலைமைப் பொருளாகிய தாம்- தான்- என்பனவற்றிற்கு உரிய வினையே தலைமையில் பொருள்கட்கும் முடிபு ஆவதொரு முறைமை பற்றியாம் என்பதும் சேனாவரையர் நச்சினார்க்கினியர் இருவர்தம் கருத்தேயாம். நன்னூல் விருத்தி இவை சிறப்புப்பற்றி ஆண்பால் வினை கொண்டன என்னும். எடுத்துக்காட்டுக்கள் பலவும் மயிலைநாதர் உரைத்தனவே. |