தீது- இவற்குக் காலம் ஆயிற்று- தெய்வம் செய்தது- வினை விளைந்தது- விதி வலிது- பூதம் புடைத்தது- ஞாயிறு பட்டது- திங்கள் எழுந்தது- மதி நிறைந்தது- சொல் நன்று- பொழுது நன்று- கனலி கடுகிற்று- வெள்ளி எழுந்தது- வியாழம் நன்று- எனவும் முறையே பண்புடைப் பொருளையும் மக்களையும் தெய்வத்தையும் உணர்த்தி நிற்கும் உயர்திணை அஃறிணையாய்ச் சொல் இயல்பு பற்றித் திணை மயங்கி வந்தன- இக்குடிமை ஆண்மை முதலிய எல்லாம் உயர்திணைப் பொருளை உணர்த்தி நின்றவேனும், அச் சொற்கள் அஃறிணை வாசகம் ஆதலின் அவற்றிற்கு ஏற்ப என்றார். உலகம் உயிர் உடம்பு என்பன ஈண்டு மக்களை உணர்த்தி நின்றன. என்னை? உயர்திணை முடிபு கொள்ளா என விலக்கப்படுவன அவையே ஆதலானும், அன்றியும் அறம் செய்து துறக்கம் புக்கான்- உயிர் நீத்து ஒருமகன் கிடந்தான்- என உயர்திணைக்கு ஏற்ற முடிபு கோடலானும் என்க.குடிமை ஆண்மை முதலிய இருதிணைக்கண்ணும் சேறல் மாலைய; உலகம் உயிர் உடம்பு முதலியன அன்ன அல்லவாம்; இவை தம்முள் வேற்றுமை. அவ்வேறுபாடு உணர்க. உலகம் என்பது இடத்தையும் ஆகுபெயரான் இடத்து நிகழ் பொருள் ஆகிய மக்கள் தொகுதியையும் உணர்த்தும் ஆதலான் இருதிணைக்கண்ணும் சென்றது அன்றோ எனின், அற்றன்று; வடநூலுள் உலகம் என்பது இருபொருட்கும் உரித்தாக ஓதப்பட்டமையான், மக்கள் தொகுதியை உணர்த்தும் வழியும் உரிய பெயரே ஆகலான், ஆகுபெயர் அன்று. அதனால் ஒருசொல் இருபொருட்கண்ணும் சொன்றது எனப்படாது; இருபொருட்கும் உரிமை உடைமையான் இருசொல் எனவே படும் என்பது. வேறுபொருள் |