பொருள்களை உணர்த்தும் சொற்களாயினும் அஃறிணை முடிபுகளையே கொள்ளும் காலம், உலகம் முதலிய சொற்களையும் எடுத்துக்காட்டுக்கள் ஆக்கினார்.உயிர், உடம்பு என்பன உயர்திணைப் பொருள்கள் என்று, அவை மக்களைச் சுட்டும் இடத்திலேயே கொள்ளல் வேண்டும். அவை மக்கள் அல்லவாகிய பொருள்களைக் குறிக்குமிடத்து யாண்டும் ஐயமின்றி அஃறிணையாகவே வரும் என்பது தெளிவு. தனிப்பட்ட முறையில் மக்களுடைய உயிரும் உடம்பும் அஃறிணை எனினும், மக்களாகிய உயர்ச்சியை உட்கொண்டு மக்கள் உயிரை ‘அறம் செய்து துறக்கம் புக்கான்’ எனவும், மக்கள் உடம்பை ‘உயிர் நீத்து ஒரு மகன் கிடந்தான்’ எனவும் உயர்திணை வாய்பாட்டால் சுட்டிக் கூறலும் உண்மையான், ஈண்டு உயிர் உடம்பு என்பன மக்கள் உயிரும் உடம்புமே என்பதனைச் சேனாவரையரும் விளக்கியுள்ளார். உலகம் என்பது மக்களைக்குறிக்கும்போது ஒரு தனிப்பட்ட சொல்; நிலத்தைக் குறிக்கும்போது வேறு தனிப்பட்ட சொல். எனினும் எழுத்து ஒப்புமையை உட்கொண்டு ஒரு சொல் இரு பொருட்கண் வந்தது என்று கூறும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. இங்ஙனம் கூறுதல் வடநூலாருக்கும் உடன்பாடு என்பது பய என்ற சொற்குப் பால் நீர் என்ற இருபொருள் உளவேனும் பாலைக்குறிக்கும் பய என்ற சொல்லும் வேறு, நீரைக்குறிக்கும் பய என்ற சொல்லும் வேறு என்ற கருத்தான் “பயக்ஷீர; பயோம்புஜ” என இருவேறு சொற்களாக அச்சொல் அமரசிங்கத்துள் கூறப்படுதலான் அறிக. உலகம் என்பது வடசொல் என்ற சேனாவரையர் கருத்தை இவர உட்கொண்டார். ‘லோக: என்ற ஆரியச் சொல் தமிழாங்கால் உலோகம் என்றாகுமே யன்றி உலகம் என்று ஆகாது. தொல்காப்பியனார் வட சொற்களை எடுத்துக் கூறி விதிகூறார்; ஆதலின் உலகம் முதலியன தமிழ்ச் சொற்களே’ என்பர் நச்சினார்க்கினியர். |