இதுமேல் திரிசொல் என்றதன் இலக்கணம் கூறுகின்றது. இ-ள்: அவ்வியற்சொல் திரிந்த திரிசொல்லாகிய சொல்லே ஒருபொருள் குறித்து வரும் பலசொல் ஆகியும் பலபொருள் குறித்து வரும் ஒரு சொல் ஆகியும் இருவகைப்படும் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. அவ்வியற்சொற் திரிந்த திரிசொல்லினது திரிபாவது உறுப்புத்திரிதலும் முழுவதூஉம் திரிதலும் என இருவகைத்து. கிள்ளை, மஞ்ஞை என்பன உறுப்புத்திரிந்தன. தத்தை, பிணிமுகம் என்பன முழுவதூஉம் திரிந்தன. வெற்பு, விலங்கல், என்பன ஒருபொருள் குறித்த வேறு பெயர்த்திரிசொல். இயங்கினான், ஏகினான் என்பன ஒருவினை குறித்த வேறுவினைத்திரிசொல். உண்கே, உண்கோ என்பன வினா ஒருமை குறித்த வேறு இடைத்திரிசொல். சால, உறு, தவ என்பன மிகுதி ஒருமை குறித்த வேறு உரித்திரிசொல். உந்திஎன்பது கொப்பூழும் தேர்த்தட்டும் யாழ்ப்பத்தர் உறுப்பும் |