சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

54 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

கான்யாறும் உணர்தலின் வேறுபொருள்குறித்த ஒரு பெயர்த்திரிசொல். துஞ்சினார்
என்பது உறங்கினாரையும் நிலையற்றாரையும் உணர்த்தலான் வேறுவினை குறித்த ஒரு
வினைத்திரிசொல். கொன் என்பது அச்சம், பயமின்மை, காலம் பெருமை என்பனவற்றை
உணர்த்தலான் வேறுபொருள் குறித்த ஓர் இடைத்திரிசொல், கடி என்பது காப்பு கூர்மை
முதலியவற்றை உணர்த்தலான் வேறுபொருள் குறித்த ஓர் உரித்திரிசொல். பிறவும்
அன்ன. 15

விளக்கம்


‘கிளி மயில் என்பனவற்றைக் கிள்ளை மஞ்ஞை எனவும் சிறிது நிற்பத் திரித்தும்,
அவற்றைத் தத்தை பிணிமுகம் எனப் பிறசொற் கொணர்ந்து முழுவதூஉம் திரித்தும்
கூறுதல்’ என்பது நச்சினார்க்கினியர் தரும் விளக்கம்.

வெற்பு, விலங்கல் என்பன ஒருபொருள் குறித்த வேறு பெயர்க்கிளவி என்பர்
சேனாவரையர்.

கேட்டீவாயாயின், செப்பீமன், ஈங்குவந்தீத்தாய் புகழ்ந்திகுமல்லரோ, என்மனார்,
என்றீசினோரே, பெறலருங் குரைத்து என்பன போல்வன வினைத்திரிசொல் என்றார்
நச்சினார்க்கினியர். உந்தி என்ற சொற்பற்றி உரையாசிரியர், சேனாவரையர்,
நச்சினார்க்கினியர் ஆகியோர் குறிப்பிட்டுள்ள னர். ஏனைய செய்திகள் பெரும்பாலும்
இவ்வாசிரியர் மயிலைநாதரை ஏற்று வரைந்தனவே. இயற்சொல்லால் உணர்த்தப்படும்
பொருள்மேல் வேறுபட்ட வாய்பாட்டான் வரும் முழுச்சொற்கள் திரிசொல்லாகும்
என்றார் தெய்வச்சிலையார். உறுப்புத்திரிதலையும் முழுதும் திரிதலையும் உரையாசிரியர்
பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

நிலையறுதல் இயற்கை எய்துதல் என்னும் பொருட்டு போலும்.