அருமையான் அன்றி இயல்பால் பொருள் உணரும் சொல்லை இயற்சொல் எனவும் அதனின் வேறாய்அரிது உணர்பொருளன ஆகிய சொல்லைத் திரிசொல் எனவும் கூறிய உண்மை நோக்காது, யான்- யாம்-நீ- நீர் என்பன என்-எம்- நின்-நும் எனத்திரிந்தாற்போல மலை என்னும் சொல்லே விலங்கல் அடுக்கல் என்னும் தொடக்கத்தனவாய்த் திரிதலின் திரிசொல் எனப்படும் எனவும், அது திரியுங்கால் கிளி என்பது கிள்ளை என உறுப்புத்திரிந்தம் தத்தை என முழுவதும் திரிந்தும் வரூம் எனவும் கூறினார். மலை என்பதே விலங்கல் அடுக்கல் என்னும் தொடக்கத்தனவாய்த் திரியும்எனின், அவையெல்லாம் ஒருசொல்லெனல் வேண்டும். அவ்வாறன்றி ‘ஒரு பொருள் குறித்த வேறுசொல் ஆகியும்’ எனவும், மெய்- உடம்பு- உறுப்பு- ஒற்று- உடல் புள்ளி என்றல் தொடக்கத்தவற்றைப் பரியாய நாமங்கள் எனவும் அவர்தாமே கூறுதலான் அவர்க்கு அது கருத்தன்று என மறுக்க. அப்பரியாய நாமங்கள் எல்லாம் பெரும்பான்மையும் ஒவ்வொரு காரணம் பற்றி வருதலின் வேறு சொல்லேயாம் என்பது. |