உயர்ந்தான் தான் ஏற்பானாகச் சொல்லாது ‘கொடு’ எனப் படர்க்கை வாய்பாட்டான் சொல்லும்; ஆண்டுத் திணையே பிறன் போலக் குறித்தான் ஆதலின் தன்னிடத்தேயாம் என வழு அமைத்தவாறாம் என்பது. இனி உயர்ந்தான் தமன் ஒருவனைக் காட்டி ‘இவற்குக் கொடு என்னும்’ என்று உரைப்பின் ஆண்டுப் படர்க்கைச் சொல் படர்க்கைச் சொல்லொடு இயைதலான் வழு இன்மையின் அமைக்க வேண்டாவாம். அதனான் அஃது உதாரணம் என்று என்க. அற்றேல், கொடு என்பது கொடுப்பதொரு பொருளை ஏற்றற்கு உரிய நான்கன் உருபு வந்தால் அதனை முடித்தற்கு வந்த சொல் ஆதலின் அவற்கு இவற்கு உவற்கு என்னும் சொற்களை அவாய் அவற்றை முடித்தே நிற்றல் வேண்டும்; வேண்டவே, ‘இவற்குக் கொடு’ என்பதும் அவ்வியல்பிற்று அன்றோ எனின், அன்று என்க; என்னை? தன்னைப் பிறன் ஒருவன் போலக் கூறும் கருத்து வகையான் எனக்குக் கொடு என்பதுபட நின்றமையின். 7 |