இ-ள்: தொழில் நிகழ்ச்சிக்கு இடம் ஆதல் தன்மையை உடையது காலம் என்பதாம். அக்காலம்தான் தொழிலது கழிவு பற்றியதூஉம், தொழில் தொடங்கப்பட்டு முற்றுப்பெறாத நிலைமை பற்றியதூஉம், தொழில் பிறவாமை பற்றியதூஉம் என ஒரு மூன்று திறத்தினை உடைத்தாம் என்றவாறு. வரலாறு: பண்டு உண்டான்- இன்று உண்ணாநின்றான்- நாளை உண்பான்- எனவரும். தொழிலாவது பொருளது புடை பெயர்ச்சி ஆகலின் ஒரு கணம் நிற்பது அல்லது இரண்டு கணம் நில்லாமையின் நிகழ்ச்சி என்பது ஒன்று அதற்கு இல்லை ஆயினும், உண்டல்- தின்றல்- வருதல்- எனப் பல் தொழில் தொகுதியை ஒரு தொழிலாகக் கோடலான் உண்ணாநின்றான்- தின்னாநின் றான்- வாரா நின்றான்- என நிகழ்ச்சியும் உடைத்து ஆதலின் அதுபற்றி வரும் நிகழ்காலமும் உடைத்தாயிற்று என்பது. நிகழ்காலம் ஒன்றுமே உளது என்பாரும், இறப்பும் எதிர்வும் என இரண்டு என்பாரும், இறப்பு நிகழ்வு எதிர்வு என மூன்று என்பாரும் எனப் பல பகுதியர் ஆசிரியர். அவருள் மூன்று என்பார் மதம் பற்றி ‘மூவகைத்தே’ எனத் தேற்ற ஏகாரம் கொடுத்தார். |