சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-10543

நீ உண்டு வருவாய்- உழுது வருவாய்- என இறந்தகால வினையெச்சம் நின்று முடிக்கும்சொல்லின் எதிர்காலத்தொடு மயங்கி வருதலும் ஈண்டே அமைத்துக் கொள்க,

பிறவும் அன்ன.

யாவன் ஒருவன் எனப் பொதுவகையால் கூறாது சுட்டி ஒருவர் பெயர்
கொண்டவழிச் சாத்தன் தவம் செய்து துறக்கம் புக்கான்- தவம் செய்யின் துறக்கம்
புகுவான்- என ஏனைக் காலங்களால் கூறப்படுதலின், சுட்டி ஒருவர் பெயர் கொள்ளாத
வழியே மயங்கும் என்பது பெற்றாம்.

தவம் செய்தான் சுவர்க்கம் புகும்- தாயைக்கொன்றான் நிரயம் புகும்- என்பன
போல்வன இயல்பாக தெளிவாக ஒன்றனுள் அடங்கும் என்க, இயல்பும் தெளிவும்
தெய்வத்தானாக பிறிது ஒன்றானாகத் திரிதலும் உடைய ஆகலானும், அவை போல
இவை திரிபில ஆகலானும், இறந்த காலத்தால் கூறப்படாமையானும் அவற்றுள் அடங்கா
என்க.

யாம் பண்டு விளையாடும் கா இது என்றால்போல்வனவற்றை இயல்புள்
அடக்குவாரும் உளர். அவை இயல்பு பற்றி மயங்காமைக்கு யாம் இயல்பு பற்றி
மயங்குவனவற்றிற்குக் காட்டிய உதாரணங்களே சான்றாதல் அறிக. 10
 

விளக்கம்
 

இந்நூற்பாவில் காலவழுவமைதி மூவகையாகக்கொள்ளப்பட்டது. விரைவுபற்றிக்
கூறுங்காலும், மிகுதிபற்றி இருவினைப் பயனைக் குறிப்பிட்ட எழுவாய் இன்றிப்
பொதுவாகக் கூறுங்காலும் முறையே இறந்த காலத்தொடு ஏனைய காலங்களும்
நிகழ்காலத்தொடு ஏனைய இரண்டு காலங்களும் மயங்கும்.

இயல்புபற்றியும் தெளிவுபற்றியும் எதிர்காலம் ஏனைய இரண்டு காலத்தொடும்
மயங்கும்.