இது ‘வழாஅல் ஓம்பல்’ என மேற்கூறிப் போந்த வினாவாவது இன்னது என்பதூஉம், இத்துணைத்து என்பதூஉம், அதன் வழுவமைதியும் உணர்த்துகின்றது. இ-ள்: அறியலுறவு வெளிப்படுப்பதாகிய சொல் வினா என்பதாம். அதுதான் அறியாமையும் ஐயமும் அறிபொருளும் கொடுத்தலும் கொள்ளுதலும் ஏவலும் ஆகிய இவற்றின் கண் வெளிப்படும். இவ்வறுவகை வினாவுள்ளும் இறுதிக் கண் நின்ற நான்கும் முதற்கண் நின்ற இரண்டனோடு ஒக்கும் என்றவாறு. அறியான் வினா-உயிர் எத்தன்மைத்து என வினாவுவது. ஒருபுடையானும் அறியப்படாத பொருள் வினாவப்படாமையின் பொதுவகையான் அறியப்பட்டுச் சிறப்பு வகையான் அறியப்படாமை நோக்கி ‘அறியான் வினா’ ஆயிற்று. |