அறிபொருள் வினாவினை அறிவு ஒப்புக்காண்டல்- அவன் அறிவுதான் காண்டல்- மெய் அவற்குக் காட்டல்- என்று மூவகையாகப் பிரித்து, அவற்றுடன் அறியான் வினாவையும் ஐய வினாவையும் கூட்டி வினா ஐந்து வகைப்படும் என்றார் உரையாசிரியர். சேனாவரையர் வினாவினை அறியான் வினா- ஐயவினா- அறிபொருள் வினா-என்று மூன்று வகையாகப் பகுத்துக்கொண்டார். நச்சினார்க்கினியர் வினாவினைச் சேனாவரையர் போல மூவகைப்படுத்திப் பின் அறிபொருள் வினாவினை உரையாசிரியர் கருத்தை ஒட்டி மூவகையாகப் பகுத்துக் கூறினார். நன்னூலார் அறிவு- அறியாமை- ஐயுறல்- கொளல்- கொடை- ஏவல் என்று வினாவினை ஆறுவகையாகப் பகுத்துக்கூறினார். அதனையே இவ்வாசிரியரும் பின்பற்றியுள்ளார். சின்னூல் உரையாசிரியர், உரையாசிரியரை ஒட்டி வினாவகை ஐந்து என்றார். அறிபொருள் வினாவாவது ஆசிரியன் மாணாக்கனை வினவுவதும் மாணாக்கர் தம்முள் வினவிக்கொள்ளுவதும் போல்வன. மாணாக்கர் தம்முள் வினவிக்கொள்ளுதல் அறிவு ஒப்புக்காண்டல்- அவன் அறிவு தான் காண்டல்- என்ற கருத்துப் பற்றியும், ஆசிரியன் மாணாக்கனை வினவுவது அவன் அறிவுதான் காண்டல்- மெய் அவற்குக் காட்டல்- என்ற கருத்துப் பற்றியும் ஆம் என அறிக. அறியான் வினாவும் ஐய வினாவும் வழாநிலையாம். ஏனைய நான்கும் வினாவாய்பாடு ஆதல் நோக்கி வழு அமைக்கப்பட்டன. மூன்று என்பார் சேனாவரையர். |