சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

548 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

‘யாது, ‘எவன்’- வினாவாய்த் தோன்றுமாறு
 

306. யாது எவன் என்னும் ஆயிரு கிளவியும்
அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும்

 

இது வினாச் சொற்களுள் சிலவற்றிற்குப் பொருள் பற்றி வரையறை கூறுகின்றது.

இ-ள்: யாது எவன் என்னும் அவ்விரண்டு சொல்லும் அறியாப் பொருளிடத்து
வினாவாய் யாப்புறத் தோன்றும் என்றவாறு.

இச்சொற்குப் பொருள் யாது- இச்சொற்குப் பொருள் எவன்- எனவரும். ஈண்டும்
‘அறியாப் பொருள்’ என்றதற்கு மேல் உரைத்தாங்கு உரைக்க. இக்காலத்து எவன் என்பது
என் என்றும் என்னை என்றும் மருவி வழங்கும்.

யா- யாவை- யாவன்- யாவள்- யாவர்- யார்- யாண்டு- யாங்கு- என்னும்
தொடக்கத்தன திணையும் பாலும் இடமும் முதலாகிய சிறப்பு வகையானும் சிறிது
அறியப்பட்ட பொருள் ஆதலின், அவை அறியாப் பொருள்வயின் செறியத்
தோன்றாமையின், இவற்றையே விதந்து ‘அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும்’
என்றார். இவையும் திணையும் பாலும் குறித்து வருதலின் சிறப்புவகையானும்
அறியப்பட்ட பொருள் அல்லவோ எனின், இச்சொற்குப் பொருள் யாது- இச்சொற்குப்
பொருள் எவன்- என்று வினாவியவழி, வினாவுகின்றான் அஃறிணை ஒருமையும்
பொதுமையும் துணிந்து அவற்றின் பகுதி அறிதற்கு வினாவாது பொதுவகையான்
வினாவுதலும், இறுப்பானும் பொதுவகையான் வினாவினான் என்று உணர்தலும்
வழக்கினகத்து அவ்விருவரது குறிப்பொடு படுத்து உணர்க. 12
 

விளக்கம்
 

நூற்பா தொல்காப்பிய நூற்பா; உரை சேனாவரையர் உரையே.