இ-ள்: முற் கூறப்பட்ட இரண்டனுள் யாது என்னும் வினாச்சொல் அறியாப் பொருள் வினா ஆதலே அன்றி, அறிந்த பொருட்கண் ஐயம் நீக்குதற்கு ஆராய்ந்த சொல் ஆதலும் உரித்து என்றவாறு. எ-டு: இம்மரங்களுள் கருங்காலி யாது? நம் எருது ஐந்தனுள் கெட்ட எருது யாது? என வரும். நமருள் யாவர் போயினார்? அவற்றுள் எவ்வெருது கெட்டது? எனப் பிறவும் அறிந்த பொருள்வயின் ஐயம் தீர்த்தற்குத் தெரிந்த கிளவியாய் வருதலின் அவையும் ஈண்டே அமைக்கற்பால எனின், அவை அறிந்த பொருள்வயின் ஐயம் தீர்த்தற்கு அல்லது யாண்டும் வாராமையின் ஈண்டு அமைக்கப்படா என்பது. 13 |