சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-14553

  நீஉண்- ஏவல்.
வயிறு குத்திற்று, குத்துகின்றது- உற்றது உரைத்தல்.
வயிறுகுத்தும்- உறுவதுகூறல்.
பசித்தேன், பொழுது ஆயிற்று- நேர்தல்.
உழுந்தல்லது இல்லை- சொல் தொகுத்து இறுத்தல்.
 

இவை நேர்விடை அன்மையின் வழுவாய், ஒருவாற்றான் வினாய பொருளை
அறிவுறுத்தலின் அமைக்கப்பட்டன.

சேனாவரையர் செவ்வன்இறை- இறைபயப்பது- என்று செப்பு இருவகைப்படும்
என்றார்.

உரையாசிரியர் செப்பு வினாஎதிர்வினாதல்- ஏவல்- மறுத்தல் உற்றதுஉரைத்தல்-
உறுவதுகூறல்- உடன்படுதல்- என்று அறுவகைப்படும் என்றார். ‘இவ்வறுவகையுள்
செவ்வன் இறை அடங்காது, மறுத்தலும் உடன்படலும் வினாவப்பட்டார் கண்ண அன்றி
ஏவப்பட்டார்கண்ணேயே நிகழும்’ என்று உரையாசிரியர் கருத்தைச் சேனாவரையர்
மறுத்தார்.

நச்சினார்க்கினியர் செவ்வன் இறை- இறை பயப்பது- என்று விடையை
இருவகைப்படுத்தி, இறை பயப்பதன் வகையாக வினாஎதிர் வினாதல்- ஏவல்- மறுத்தல்-
உற்றது உரைத்தல்- உறுவது கூறல்- உடன்படுதல்- சொல் தொகுத்து இறுத்தல்-
சொல்லாது இறுத்தல்- என்ற எட்டனை விளக்கினார். இவ்வாசிரியர் அவற்றுள் ஏழனை
நூற்பாவிலேயே சுட்டி, சொல்லாது இறுத்தலைத் ‘தேரின்’ என்ற மிகையாற் கொண்டார்.

தெய்வச்சிலையார் மணிமேகலையை ஒட்டி விடை வகைகளைத் துணிந்து கூறல்-
கூறிட்டு மொழிதல்- வினாவி விடுத்தல்- வாய்வாளா திருத்தல்- என்று நான்கு
வகையாகக் கூறி விளக்கினார்.