சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-16557

சொல் தொகுத்திறுத்தல்
 

310. இல்லது அல்லதுஇல் அதனால் இல்எனின்
அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறியும்
அப்பொருள் கூறி அகற்றின் அப்பொருளினைச்
சுட்டியும் மாற்றுவர் சொல்சுருங் குதற்கே.
 

 

இது சொல் தொகுத்து இறுத்தலும் என முற் கூறப்பட்ட செப்பு இலக்கணம்
கூறுகின்றது.

இ-ள்: தம்முழை இல்லாத பொருளை ‘அல்லது இல்லை’ என்னும் வாய்பாட்டான்
இல்லை எனல் உறுவாராயின் வினாய பொருள் தன்னையே கூறாது அப்பொருள்
அல்லாத பிறிது பொருளைக் கூறியும், பிறிது பொருள் கூறாது அப்பொருள் தன்னையே
கூறி இல்லை எனல் உறுவாராயின் அப்பொருளைச் சுட்டியும் இல்லை என்று கூறி
மறுப்பர், வினாயதன் புறத்துச் சொல் பல்காமற் பொருட்டு என்றவாறு.

எ-டு: பயறு உளவோ வணிகீர் என்று வினாயவழி, உழுந்து அல்லது இல்லை-
கொள் அல்லது இல்லை எனவும், இப்பயறு அல்லது இல்லை இவை அல்லது இல்லை
எனவும் தன்னுழை இல்லதனை ‘அல்லது இல்’ என்னும் வாய்பாட்டான் இல்லை
என்பான் பிறிது பொருள் கூறியும் சுட்டிக் கூறியும் மறுத்தவாறு காண்க.

தன்னினம் முடித்தல் என்பதனான் பசும்பயறு அல்லது இல்லை- பெரும் பயறு
அல்லது இல்லை- எனக் கிளந்து கூறுதலும் கொள்க.

இவை அல்லது இல்லை என்புழி, முன்னர்க் கிடந்தவாறு காட்டி இவை என்றான்
ஆதலின், அது ‘பொருளொடு புணராச் சுட்டுப் பெயர் ஆயினும், பொருள் வேறுபடாது’
தொல்.சொல்.37 இப்பயறு எனப் பொருளொடு புணர்ந்த சுட்டுப் பெயரேயாம் எனக்
கொள்க.