அல்லது இல்லதனான் இல் எனின் எனப் பொருள் பற்றி ஓதினார் ஆதலின், ‘அல்லது இல்’ எனும் வாய்பாடே அன்றி உழுந்து அன்றி இல்லை- கொள் அன்றி இல்லை- என்பன போல அப்பொருள் படுவன எல்லாம் கொள்க. ‘அப்பொருள் அல்லாப் பிறிது பொருள் கூறியும்’ எனப் பொதுப்படக் கூறினாரேனும், பயற்றான் முடிக்கும் குறை உழுந்தானும் முடிதலின், பயறு உளவோ என்று வினாயவழி, உழுந்து அல்லது இல்லை என அதற்கு இனமாகிய பிறிது பொருளைக் கூறி இல் என்பதே இயைபு உடைத்து எனக் கொள்க. அன்றியும், பாம்புணிக் கருங்கல்லும் பயறும் விற்பான் ஒருவன் உழைச் சென்று ‘பயறு உளவோ’ என்றவழிப் ‘பாம் புணிக் கருங்கல் அல்லது இல்லை’ என்றால் படும் இழுக்கு இன்மையின், இனப்பொருள் கூறாது பாம்புணிக் கருங்கல் அல்லது இல்லை எனப் பிறிது பொருள் கூறினும் இழுக்கு இன்று எனலும் ஒன்று. பயறு உளவோ என்று வினாயவழிப் பயறு இல்லை என்றல் செவ்வன்இறை ஆதலின் வழு இன்மையான் அங்ஙனம் கூறாது, பிறிது பொருள் கூறியும் சுட்டிக் கூறியும் இறுத்தல் ‘அல்லது இல்’ என்னும் வாசகத்தான் சொல் தொகுத்து இறுப்பான் இறுத்தலே என்று உணர்க. இவ்வாறு சொல் தொகுத்து இறுத்தல் ஆசிரியர் தொல்காப்பியனாருக்கும் கருத்து என்பது சேனாவரையர் உரையான் உணர்க. 16 |