வினாய பொருள் இல்லை எனக் கூறுவார் செவ்வன் இறையாக இல்லை என்றே விடை பகரலாம். ‘அல்லதுஇல்’ என்ற வாய்பாட்டைப் பயன்படுத்தி விடைகூறுவார்க்கே இந்நூற்பாச்செய்தி பயன்படுவதாகும். உழுந்தல்லது இல்லை என்பது பிறிதுபொருள் கூறியது. இப்பயறு அல்லது இல்லை என்பது அப்பொருளைச் சுட்டிக்கூறியது. சுட்டிக்கூறுங்கால், விதந்துகூறி விடையிறுத்தற்குப் பசும்பயறல்லதில்லை முதலியன எடுத்துக்காட்டாகும். இவை அல்லது இல்லை என்பதும் சுட்டிக் கூறலேயாம். பிறிதுபொருள் இனப்பொருளாகவே இருத்தல் வேண்டாம் என்பது உரையாசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், நன்னூலார், முத்துவீரர் என்பவர் கருத்தாகும். இனன் அல்லாத பொருளாகவும் இருக்கலாம் என்பது சேனாவரையர் கருத்து. பெரும்பாலும் சேனாவரையரை ஒட்டியே உரை வரையும் இவ்வாசிரியர் இந்நூற்பாவில் இரு கருத்துக்களையும் குறிப்பிட்டுள்ளார். பயறும் பாம்புணிக் கருங்கல்லும் விற்பான் ஒருவன், பயறு உளவோ’ என்று வினாவிற்குப் ‘பாம்புணிக்கருங்கல் அல்லது இல்லை’ என்று விடை கூறுதல் தவறாகாது என்பது சேனாவரையர் கருத்து. பயற்றான் முடிக்கும் குறை உழுந்தான் அன்றிப் பாம்புணிக்கருங்கல்லால் முடிவது அன்மையின், பாம்புணிக்கருங்கல் அல்லது இல்லை என்பது விடை ஆகாது என்பது நச்சினார்க்கினியர் கருத்து. இவர் நச்சினார்க்கினியர் கருத்தை முழுதும் ஏற்றுச் சேனாவரையர் கருத்தினையும் மறுக்க மனம் இன்றித் தழுவினார். எப்பொருளாயினும் தொல்.சொல்.35 என்ற நூற்பாவில் நச்சினார்க்கினியர் ‘அல்லது இல்’ என்ற அஃறிணை ஒன்றன்பால் தொடர் இருதிணை ஐம்பால் மூவிடங்களிலும் வழுவமைதியாக. ஒன்றன்பால் தொடர் இருதிணை ஐம்பால் மூவிடங்களிலும் வழுவமைதியாக. |