இது முற் கூறிப்போந்த மரபாவது இத்தன்மைத்து என்று அதன் இலக்கணம் கூறுகின்றது. இ-ள்: யாது ஒரு பொருளை யாது ஒரு சொல்லான் யாது ஒரு நெறியான் கல்வியால் நிறைந்த தொல்லாசிரியர் ஐம்பெருங்காப்பியம் எண்பெருந்தொகை பத்துப்பாட்டு பதினெண்கீழ்க்கணக்கு முதலிய இலக்கியங்களுள்ளும் விரிந்த இலக்கண நூலுள்ளும் வழக்கத்தும் கூறினார், அப்பொருளை அச்சொல்லான் அந்நெறியான் கூறுதல் முற்கூறிப்போந்த மரபிற்கு இலக்கணமாம் என்றவாறு. எனவே, தனிமொழி சமய ஆற்றலால் பொருள் உணர்த்தும் என்றதனை வலியுறுத்திற்று என்பதூஉம் ஆயிற்று. உதாரணம் முன்னர்க் காட்டினாம். |