இது விசேடிக்கும் சொல் இனம் உள்ளதற்குக் கொடுத்தல் அது அதன் பொதுமையின் நீக்கி விசேடித்தலின் மரபாம் ஆகலான் உரித்து என்றும், இனம் இல்லதற்குக் கொடுத்தல் அது அதன் பொதுமையின் நீக்கி விசேடித்தல் இன்றுஆயினும் செய்யுட்கண் அணியாய் வழக்கின்கண் பட்டாங்கு படவும் நிற்றலின் சிறுபான்மை உரித்து என்றும் மரபு வழாநிலையும் மரபுவழுஅமைதியும் கூறுகின்றது. இ-ள்: பொருள் முதலாகிய ஆறனையும் அடையாக அடுத்துவரும் சொல் இனப் பொருளைச் சுட்டி அவற்றினின்றும் விசேடிக்கப்படும் பொருட்கு உரித்தாம்; அங்ஙனம் விசேடிக்கப்படாத பொருட்கும் ஒரோ விடத்து உரித்தாம், இருவகை வழக்கின் கண்ணும் என்றவாறு. |