பொருட்பெண்டிர், கான்யாறு, முந்நாட்பிறை, கலவமாமயில், சிறுகோடு, ஆடுபாம்பு என்ற பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் பற்றிய அடைகளை உடைய தொடர்களில், பொருள் என்ற அடை ஏனைய குலமகளிரையும், கான் என்ற அடை ஏனைய சீவநதிகளையும், முந்நாள் என்ற அடை ஏனைய நாட்களையும், கலவம் என்ற அடை கலவம் அற்ற பெண்மயிலையும், சிறு என்ற அடை ஏனைய பெருங்கோடுகளையும், ஆடு என்ற அடை ஏனைய ஆடாத பாம்புகளையும் விலக்கி அவ்வடைகளைக்கொண்ட பெயர்களையே விசேடித்தவாறு. நெய்க்குடம் முதலாயினவும் அன்ன. இமயத்தின் பொற்கோடு என்ற அடையும், வேங்கடத்தின் வடக்கு என்ற அடையும், கோங்கின் வேனில் என்ற அடையும், வண்டின் சிறகர் என்ற அடையும், ஞாயிற்றின் செம்மை என்ற அடையும், திங்களின் வெண்மை என்ற அடையும் இனம் சுட்டி விலக்கப் பயன்படாது அவ்வப் பொருட்குத் தன்மை குறித்து நின்றவாறு காண்க. உப்பளம் முதலாயினவும் அன்ன. |