இஃது இயற்கைப் பொருள்மேலும் செயற்கைப் பொருள்மேலும் சொல் நிகழ்த்தும் மரபு கூறுகின்றது. இ-ள்: தன் இயல்பின் திரியாது நின்ற பொருளை அதன் இயல்பு கூறுங்கால் ஆக்கமும் காரணமும் கொடாது இவ்வியல்பிற்று எனச் சொல்லுதலும், காரணத்தால் தன்மை திரிந்த பொருளை அதன் திரிபு கூறுங்கால் ஆக்கம் கொடுத்துச் சொல்லுதலும், அங்ஙனம் சொல்லுங்கால் அவ்வாக்கச் சொல்தான் காரணச் சொல்லை முன்னாக உடைத்து ஆதலும், காரணம் முதற்று எனப்பட்ட ஆக்கச் சொல் காரணம் இன்றி வரினும் வழக்கிடத்துக் குற்றம் இன்று ஆதலும் பாதுகாத்து அறிந்து கொள்க என்றவாறு. இயல்பு- பொருட்குப் பின் தோன்றாது உடன் நிகழும் உண்மை. எ-டு: நிலம் வலிது- நீர் தண்ணிது- தீ வெய்து- வளி உளரும்- உயிர் உணரும் - எனவும், கடுக்கலந்த கைபிழி எண்ணெய் பெற்றமையான், மயிர் நல்ல ஆயின- எருப்பெய்து இளங்களை கட்டு நீர்கால் யாத்தமையான், பைங்கூழ் நல்ல ஆயின- நீர் கலத்தலான், நிலம் மெலிது ஆயிற்று- தீச்சார்த்தலான், நீர் வெய்து ஆயிற்று- எனவும், மயிர் நல்ல ஆயின- பயிர் நல்ல ஆயின- நிலம் வலிது ஆயிற்று- நீர் வெய்து ஆயிற்று- எனவும் வரும். |