இற்று என்பது வினைக்குறிப்பு வாய்பாடு ஆயினும், உளரும் உணரும் என்னும் தெரிநிலை வினையும் இற்று என்னும் பொருள்பட நிற்றலின், இற்று எனக் கிளத்தலே யாம் என்பது. சேற்று நிலம் மிதித்து வன்னிலம் மிதித்தான் நிலம் வலிதாயிற்று என்றவழி, மெலிதாயது வலிதாய் வேறுபட்டது என ஆக்கம் வேறுபாடு குறித்து நிற்றலின் செயற்கைப் பொருள் ஆக்கமொடு வந்ததாம் அல்லது இயற்கைப் பொருள் ஆக்கமொடு வந்தது அன்றாம். ஆக்கம் காரணம் இன்றியும் வழக்கிடைப் போக்கு இன்று எனவே செய்யுளிடத்து ஆக்கமும் காரணமும் பெற்றே வரும் என்பதாயிற்று. |