என ஆக்கம் இன்றிக் காரணம் அடுத்தும்,மயிர் நல்ல- பயிர் நல்ல- என ஆக்கமும் காரணமும் இன்றியும் வந்தனவால் எனின், முறையே களவுக் காலத்து அரியன கற்புக் காலத்து எளிய ஆயின என்பது கருத்து ஆதலின் இக்காலம் காரணம் என்பது பெறப்படுதலானும்- அதனான் என்பது அதிகாரத்தான் பெறப்படுதலானும்- காரணம் இன்றி வந்தது எனப்படாது எனவும், ‘குக்கில் புறத்த சிரல்வாய’ என்புழி ஆக்கம் விகாரத்தால் தொக்கு நின்றது ஆதலின் ஆக்கம் இன்றி வந்தது எனப்படாது எனவும், மயிர் நல்ல- பயிர் நல்ல- என்புழி அந்நன்மை பொருட்குப் பின் தோன்றாது உடன் தோன்றிற்றேல் இயற்கையாம்; அவ்வாறன்றி முன் தீயவாய்ப் பின் நல்ல ஆயின வழி அத்தீமை காணாதான் மயிர் நல்ல- பயிர் நல்ல- எனினும் இழுக்கன்று ஆதலான் ஆக்கமும் காரணமும் இன்றி வந்தது எனப்படாது எனவும் மறுக்க. இவ்வாறு செயற்கைப் பொருள் மேல் சொல் நிகழ்த்து மரபு என்பது ஆசிரியர் தொல்காப்பியனாருக்கும் கருத்தாதல் எடுத்தோத்தானும் சேனாவரையரை உள்ளிட்ட உரையாசிரியர் உரையானும் உணர்க. அவ்வாறு உணராதார் |