‘தென்பாண்டி குட்டம் குடம் கற்கா வேண்பூழி பன்றி அருவா அதன்வடக்கு-நன்றாய சீத மலாடு புனல்நாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாட்டு எண்’ இதனான் அறிக. இவற்றுள், தென்பாண்டி நாட்டார் ஆவினைப்பெற்றம் என்றும், குட்டநாட்டார் தாயைத்தள்ளை என்றும், குடநாட்டார் தந்தையை அச்சன் என்றும், கற்கா நாட்டார் வஞ்சரைக் கையர் என்றும், வேணாட்டார் தோட்டத்தைக் கிழார் என்றும், பூழிநாட்டார் சிறுகுளத்தைப் பாழி என்றும், அருவா நாட்டார் செய்யைச்செறு என்றும், அருவாவடதலை நாட்டார் புளியை எகினம் என்றும் சீத நாட்டார் தோழனை எலுவன் என்றும் வழங்குப. பிறவும் வந்துழிக்காண்க. இனி இவற்றைச் சூழ்ந்த தமிழ்ஒழி பதினேழ் நிலத்தினையும், ‘சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுகுடகம் கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம் வங்கம் கங்கம் மகதம் கவுடம் கடாரம் கடுங்குசலம் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாம் இவையே’
இதனான் அறிக. அருணம், காம்போசம், ஈழம், கூவிளம் பல்லவம், அங்கம் என்றல் தொடக்கத்தனவும், இவற்றின் பரியாயமும் இவற்றின் பகுதியுமாய் இவற்றுள்ளே அடங்கும் என்க. அந்தோ என்பது சிங்களச்சொல். கரைய- சிக்க- குளிர என்பன கருநடச்சொல். எருத்தைப்பாண்டில் என்பது தெலுங்குச்சொல். மாமரத்தைக் கொக்கு என்பது துளுவச் சொல். ஒழிந்த சொற்களும் வந்துழிக்காண்க. 16 |