இஃது அடையும் சினையும் முதலும் தம்முள் தொடரும் வழிப் படுவதொரு மரபு கூறுகின்றது. இ-ள்: பண்புச் சொல்லும் சினைச் சொல்லும் முதற் சொல்லும் இங்ஙனம் கூறப்பட்ட முறையே தொடர்தலும், இரண்டு பண்புச் சொல் முதற் சொல்லோடு தொடர்தலும் வழக்கிடத்து மரபாம். இரண்டு பண்புச் சொல் சினைச் சொல்லோடு தொடர்தலும், பிறவாறு மயங்கித் தொடர்தலும் செய்யுளிடத்து மரபாம் என்றவாறு. வரலாறு: செங்கால் நாரை- நெட்டிலைத் தெங்கு- பெருந்தலைச் சாத்தன் எனவும், ‘சிறு கருங் காக்கை’ (ஐங்குறு.391) இளம் பெருங் கூத்தன் எனவும், |