தலை என்பதற்கு நாகம் என்பதும் முடிக்குஞ் சொல் அன்மை அறிக. பன்னிரு கையும் என்புழி, பன்னிரண்டு என்பதே தொகுதிப் பெயர். கை பன்னிரண்டும் என்றே வருதல் வேண்டும். ஆயின், பன்னிருகை என்பது ஒட்டி நின்ற ஒரு சொல்லாய்க் கை என்பதன் வினையாகிய இயற்றி என்பதனைக் கொண்டு முடியும் நிலை உண்மையின், பன்னிருகை என்பது உம்மையுற்றது. வினைப்படு தொகுதி என்பது முடிக்குஞ் சொல்லே அது பெயராகவும் இருக்கலாம், வினையாகவும் இருக்கலாம் ஆதலின் உம்மைபெற்ற சொல் பெயர் கொண்டும் முடியலாம் என்பதற்குக் கண் இரண்டும் குருடு முதலியன எடுத்துக்காட்டுக்களாம். |