இஃது ஒருபொருள் உணர்த்தும் இருபெயரிடத்து வழுவற்க எனவும் காக்கின்றது. இ-ள் படர்க்கை இடத்த ஆகிய உயர்திணைப் பெயரும் விரவுப்பெயரும் அஃறிணைப்பெயரும் ஆகிய மூன்று பெயரோடும் சுட்டுப் பெயர் தொடர்ந்து வருமாயின், அங்ஙனம் வரும் இடத்து ஒன்றனை ஒன்று கொள்ளாது இரண்டும் பிறிது வினைகொண்டு முடியுமாயின் சுட்டுப்பெயர் அம் மூவகைப் பெயர்க்கும் பின்னாகவரும்; அவ்வாறு முடியாது பெயர்கொண்டு முடியுமாயின், அம்முடிபிற்கு முன்னும் பின்னும் வரும், வழக்கிடத்து; செய்யுளிடத்து இவ்வரையறை இன்றி முன்னும் பின்னும் வரும் என்றவாறு. ஏற்புழிக் கோடலான் அம்மூவகைப் பெயர்களின் பின் நிற்றற்கு உரிய அகரச்சுட்டே கொள்க. |