சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-22579

சுட்டுப்பெயரைத் தம் பின் பெற்று வந்தமைக்கு எடுத்துக்காட்டுக்கள் தரப்
பெற்றுள்ளன. நம்பி அவன் முதலிய எடுத்துக்காட்டுக்கள் ஒன்றனை ஒன்று கொண்டு
முடிதற்கண் ஆவன.

மூவகைப் பெயரும் சுட்டுப்பெயரும் வேறு வினை கோடற்கண் சுட்டுப்பெயரை
முற்கூறின் சுட்டுப்பெயர் தன்னை அடுத்து வரும் பெயர்ப்பொருளைச் சுட்டாது வேறு
ஒரு பொருளைச் சுட்டியதாகும் என்பது விளக்கப்பட்டது.

செய்யுளுள் அவன் என்ற சுட்டுப்பெயர் முன்னும் சேந்தன் என்ற இயற்பெயர்
பின்னும் வந்தமை வழுவமைதியாகச் சுட்டப்பட்டுள்ளது.

சுட்டு இடைச்சொல்லைப் பகுதியாகக் கொண்டு அமைந்த ‘அதனால்’ என்ற
இடைச்சொல்லும் தான் தனக்குமுன் குறிக்கப்பட்ட தொடர் மொழிப்பொருளைச் சுட்டி
அத்தொடர்மொழிக்குப் பின்னரே வரும் என்பது.

தனிப் பெயரைச் சுட்டும் சுட்டு அப்பெயர்க்குப் பின் வருவது போலவே
தொடர்மொழிப் பொருளைச் சுட்டும் அத்தொடர் மொழிக்குப் பின்னரே வரும் என்பதும்
விளக்கப்பட்டுள்ளது.

தனிப் பெயரைச் சுட்டும் சுட்டினைப் பற்றிய இந்நூற்பாவில் தொடர் மொழிப்
பொருளை உணர்த்தும் சுட்டு தன்னினம் முடித்தலால் கொள்ளப்பட்டது.

உருபு ஏற்ற ‘அதனால்’ என்ற சுட்டுப்பெயர் அது+அன்+ஆல் என்று பிரிக்கப்படும்;
ஆயின், ‘அதனால்’ என்ற இடைச்சொல் பிரிக்கப்படமாட்டாது. இது தம்முள் வேற்றுமை.
 

  ‘அதனால் செயற்படற்கு ஒத்த கிளவி’ தொல்.சொல்.110