இஃது ஒருபொருள் உணர்த்தும் பலபெயர் இடத்து முடிவு வழுவற்க எனக் காக்கின்றது. இ-ள்: ஒரு பொருளைக்குறித்து வந்த பல பெயர்ச் சொற்கள் ஒரு தொழிலே முடிபாகக் கூறாது பெயர்தோறும் வேறாகிய தொழில்களைக் கொடுத்து முடிப்பின், ஒரு பொருளாய் ஒன்றுதல் இல என்றவாறு. ஆசிரியன் பேரூர் கிழான் செயிற்றியள் இளங்கண்ணன் சாத்தன் வந்து உண்டு சென்றான் என்னாது, ஆசிரியன் வந்தான்- பேரூர்கிழான் உண்டான்- செயிற்றியன் சென்றான்- என வேறு வேறு முடிக்கும் சொல் கொடுப்பின், வந்தான் உண்டானும் சென்றானும் ஒருவனாகாது வேறாய்த்தோன்றியவாறு காண்க. |