இதுவும் ஒரு மரபு வழுவற்க எனக்காக்கின்றது; வேறு வினைப் பொதுச்சொற்களையும் வேறு வினைப்பொருள்களைப் பொதுச்சொல்லால் கூறாது பிரித்து எண்ணும் இடத்தும் ஒருசார்க்கு உரிய வினைச்சொல்லால் சொல்லினும் எண்ணினும் வழுவாம் ஆகலின், இவை பொதுச்சொல்லால் சொல்லவும் எண்ணவும்படும் என்றலின். இ-ள்: வேறுபட்ட வினையை உடைய பலபொருள்களையும் ஒருங்கு தழுவிநிற்கும் பொதுச்சொற்களும், வேறுபட்ட வினையை உடைய பொருள்களைப் பொதுச்சொல்லால் கூறாது பிரித்து எண்ணும் இடத்தும், அவற்றுள் யாதானும் ஒன்றற்கு உரிய வினையால் கூறப்படாது, அவற்றை எல்லாம் உள்அடக்கி நிற்கும் பொதுவினையால் கூறப்படும் என்றவாறு. வரலாறு: அடிசில் என்பது உண்பன- தின்பன- நக்குவன- பருகுவனவற்றிற்கும், அணி என்பது கட்டுவன- கவிப்பன- செறிப்பன- பூண்டனவற்றிற்கும், இயம் என்பது கொட்டுவன- ஊதுவன- எழுப்புவனவற்றிற்கும், படை என்பது எய்வன- எறிவன- வெட்டுவன- குத்துவனவற்றிற்கும் பொது ஆகலான், அடிசில் அயின்றார்- மிசைந்தார்- கைதொட்டார் எனவும், |