வேறுவினைப் பொதுச்சொற்களாகிய அடிசில் முதலியவற்றிற்குப் பொதுவினையே கொடுத்தல் வேண்டும். சிறப்பு வினைக்குரிய சொற்களாகிய சோறு கறி முதலியவற்றை எண்ணி வினை கொடுக்கும் இடத்தும் பொதுவினையே கொடுத்தல் வேண்டும் என்ற மரபு வழுவற்க என்று வற்புறுத்தப்படுகிறது. அடிசில்- அணி- படை- இயம்- என்பன பல சிறப்பு வினைகளுக்குப் பொதுவான பெயர்ச்சொற்களாம். அயின்றார்- மிசைத்தார்- என்பன சேனாவரையர் கூறிய பொதுவினை- கைதொட்டார் என்பது நச்சினார்க்கினியர் கூறிய பொதுவினை. அடிசில் கைதொட்டார் முதலிய நான்கும் பொதுப்பெயர் பொதுவினை கொண்டமைக்கு எடுத்துக்காட்டு. சோறும் கறியும் என்ற சிறப்பு வினைக்குரிய சொற்கள் போல்வன எண்ணப்படுங்காலும் பொதுவினை கொண்டமைக்கு இரண்டு எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. மரபு வழுவுக்கு ஆறுஎடுத்துக்காட்டுக்கள் உள்ளன. உண்டல் சிறப்புவினையும் பொதுவினையும் ஆதல் இடம் நோக்கி உணர்க என்பது. உண்டல் தொழில் பொதுவினையாதல் தொல்காப்பிய நூற்பாவான் வலியுறுத்தப்பட்டது. |