இது பலபொருள் ஒரு சொற்கண் ஆவது ஒரு மரபு வழுக்காக்கின்றது, குறித்த பொருள் விளங்காமை கூறல் மரபு அன்மையின் விளங்கக் கூறுக என்றலான். இ-ள்: வினை முதலியபற்றி அவற்றான் வேறுபடாத பலபொருள் ஒருசொல்லை இன்னது இது எனச் சிறப்பான் எடுத்துக் கூறுவர் புலவர் என்றவாறு. எனவே, வினைமுதலியவற்றான் வேறுபடும் பலபொருள் ஒருசொல்லை அவற்றான் வேறுபடக் கூறுவர் என்பதூஉம் ஆயிற்று. வரலாறு: மா என்பது ஒருசார் விலங்கிற்கும் ஒரு மரத்திற்கும் வண்டிற்கும் பொது. குருகு என்பது ஒரு பறவைக்கும் உலைமூக்கிற்கும் வளைக்குப்பொது. |