சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

590 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘கழிப்பூக் குற்றுக் கானல் வைகி’ அகம்.330
என்பன போலச் சில பொருளை ஒழித்துச் சில பொருள் மேல் நிற்றல் உரையிற்
கொள்க.
 
  ‘மாமறுத்த மலர்மார்பு’ புறம்.7

என்றவழித் திரு என்பது இடத்தான் விளங்கிற்று என்பாரும் உளர். அது மறுத்தல்
என்னும் வினையான் விளங்கும் என மறுக்க. 26
 

விளக்கம்
 

வழுக்காத்தல்- பொருள் மயக்கம் ஏற்படாதவாறு விளங்கக் கூறுதலாம்.

மாப்பூத்தது- வினையான் பொருள் விளங்கிற்று.

இம்மாவயிரம், வெளிறு- பெயரான் பொருள் விளங்கிற்று.

மாவும் மருதும் ஒங்கின- இனத்தால் பொருள் விளங்கிற்று.

கவசம்புக்கு நின்று ‘மாக்கொணா’ என்பது சார்பான் பொருள் விளங்கிற்று.

‘மாவீழ்ந்தது’ என்றால் அத்தொடர்க்கண் மாஎன்பது மரம், விலங்கு
என்பனவற்றிற்குப் பொதுவாக அமைதலின் மாமரம் வீழ்ந்தது. விலங்குமா வீழ்ந்தது
என்றே கூறல் வேண்டும். ‘மாமறுத்த மலர் மார்பு’ என்புழி மறுத்தல் என்ற வினையான்
மா என்ற சொல் திருமகள் என்ற பொருளை விளங்கிற்று. இஃது இடத்தான் பொருள்
விளக்கிற்று என்பார் மயிலைநாதர். உரை நச்சினார்க்கினியர் சேனாவரையர் உரையே.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல்
வினைவேறு படாஅப் பலபொருள் ஒருசொல் என்று
ஆயிரு வகைய பலபொருள் ஒருசொல்.’
தொல்.சொல்.52