சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-28595

ஆவாழ்க- அந்தணர் வாழ்க- என்பன இனம் செப்பாதன எனவும், மேலைச்சேரிக்
கோழி அலைத்தது எனக் கீழைச்சேரி கோழி அலைப்புண்டது எனவும், குடம்
கொண்டான் வீழ்ந்தான் எனக் குடம் வீழ்ந்தது எனவும் வருவன இனம் செப்புவன
என்றும் கூறுவாரும் உளர். அற்றன்று; ஆவாழ்க- அந்தணர் வாழ்க’ என்புழிச்
சொல்லுவான் ஒழிந்த விலங்கும் மக்களும் சாக என்னும் கருத்தினன் ஆயின் அவையும்
இனம் செப்புவன அல்லவோ என்றும், கீழச்சேரிக் கோழி அலைப்பு உண்டல்இன்றி
மேலைச்சேரிக் கோழி அலைத்தல் அமையாமையானும், குடம் வீழ்தல் இன்றிக் குடம்
கொண்டான் வீழ்தல் அமையாமையானும், கீழைச் சேரிக் கோழி அலைப்புண்டலும் குடம்
வீழ்தலும் சொல்லான் அன்றி இன்றியமையாமை ஆகிய பொருள் ஆற்றலான் பெறப்படும்
ஆகலின் ஈண்டைக்கு எய்தா, இது சொல்லாராய்ச்சி ஆகலின் என்றுமறுக்க.
இன்னோரன்ன சொல்லாற்றலால் பெறப்பட்டவாம் என்பது. 28
 

விளக்கம்
 

நூற்பா தொல்காப்பிய நூற்பா. உரை சேனாவரையர் உரை.
 

  ‘இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்’-
குறள்.946

ஆ வாழ்க, அந்தணர் வாழ்க- என்பன இனம் செப்பும் என்ற கொள்கை
நச்சினார்க்கினியரால் இந்நூற்பா உரையில் மறுக்கப்படுகிறது: ‘எடுத்த மொழி இனம்
செப்புதலாவது அருத்தாபத்தி. (பொருளால் கொள்ளப்படுவது) அருத்தாபத்தி இனம்
செப்புமாறு தன்னொடு மறுதலைப்பட்டு நின்றது ஒன்று உள்வழி ஆயிற்று.
மறுதலைப்பாடு பல உள்வழிச் செல்லாது. ஆவிற்கு மறுதலை எருமை, ஒட்டகம் எனப்
பல உள. அந்தணர்க்கு மறுதலை அரசர் வணிகர் வேளாளர், எனப் பலர் உளர்.
அங்ஙனம் மறுதலை உள்வழிச் செல்லாது, என்பது அவர் தரும் விளக்கம்.