சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-29597

இஃது ஒருபெயர்ப் பொதுச்சொற்கண்ணதொரு மரபு வழுக்காக்கின்றது.

இ-ள்: உயர்திணைக்கண்ணும் அஃறிணைக்கண்ணும் ஒரு பெயராய்ப் பல
பொருட்கும் பொதுவாகிய சொல்லைப் பிற உள் பொருள் ஒழியத் தெரிந்துகொண்டு
பொதுமையின் வேறாகச் சொல்லுக தலைமையானும் பன்மையானும் என்றவாறு. ‘தெரிபு’
என்பதன் செயப்படு பொருள் தலைமையும் பன்மையும்.

வரலாறு: பிறரும் வாழ்வார் உளரேனும், பார்ப்பனச்சேரி என்றல் உயர்திணைக்கண்
தலைமை பற்றிய வழக்கு; எயினர்நாடு என்பது அத்திணைக்கண் பன்மை பற்றிய வழக்கு.

பிறப்புல்லும் மரனும் உளவேனும். கமுகந் தோட்டம் என்றல் அஃறிணைக்கண்
தலைமை பற்றிய வழக்கு; ஒடுவங்காடு என்றல் அத்திணைக்கண் பன்மை பற்றிய வழக்கு.
பார்ப்பார் பலராயினும், கமுகு பலவாயினும், அவைதாமே பன்மை பற்றிய வழக்காம்.

பல பொருள் ஒரு சொல்லின் நீக்குதற்கு ‘ஒருபெயர்’ என்றார்,

ஒன்று என முடித்தலான், அரசர் பெருந்தெரு- வெண்குடைப் பெருவிறல்- வயிர
கடகம்- ஆதீண்டு குற்றி- ஆன்அதர்- எருத்தில்- என்னும் பொதுச் சொல் அல்லனவும்
கொள்க.

பலகுடியும் சேர்ந்திருப்பது சேரி. பல பொருளும் தொக்கது தோட்டம். உள்ள
பொருள் எல்லாம் கூறாது ஒன்றனை எடுத்துக் கூறுதல் மரபு அன்று ஆயினும், பொதுச்
சொல் மேலும், ஒன்றென முடித்தலான் பொதுச்சொல் அல்லனவற்றின் மேலும் சொல்
நிகழ்த்துமாறு உணர்த்திய முகத்தான் அமைக்க என மரபு வழு அமைத்தவாறு என்பது.