ஒருபெயர்ப் பொதுச்சொல்லைத் தலைமையும் பன்மையும் ஆராய்ந்து அவற்றுள் ஒன்று பற்றிப் பெயரிடுக. பல பொருட்கும் பொதுவாகிய சொல்லினை அவற்றுள் ஒன்றனால் பெயரிடுதல் வழு ஆயினும், தலைமையும் பன்மையும் ஆகிய ஒன்று பற்றிப் பெயரிடும் மரபு பற்றி அமைக என மரபு வழு அமைத்தவாறு. பார்ப்பனச் சேரியில் வாழும் பார்ப்பார் சிலராயின் அப்பெயரைத் தலைமை பற்றிய வழக்காகக் கொள்க; பார்ப்பார் பலராயின் பன்மை பற்றிய வழக்காகக் கொள்க. பிறவும் அன்ன. எயினர்நாடு என்பது ஆண்டு வாழ்வாருள் எயினர் பலராதலான் வந்தபெயர். ஒருபெயர்ப் பொதுச்சொல் என்பது தன்கண் பலவகைப் பொருள்களையும் உள்ளடக்கித் தொகுதி பற்றி வந்த பெயர் என்பதாம்; பலவேறு பொருள்களில் வரும் மா, குருகு முதலியன போல்வது அன்று இது என்பது. |