சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

6 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இனிச்சேனாவரையரும் சத்தநூலார் உரைத்தாங்கு உரைப்பர்; என்னை? ‘ஆயிரு
திணையின் இசைக்குமன சொல்லே’ (தொல்.சொல்.1) என்னும் சூத்திரத்தினும், ‘பெண்மை
சுட்டிய உயர்திணை மருகின்’ (4) என்னும் சூத்திரத்தினும், முறையே ‘செலவினும்
வரவினும்’ (28) என வருதலானும், ‘ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி (12) என
ஒற்றுமைப்பட்டு வருதலானும், சொல் நிகழ்ச்சிக்குப் பொருள் இடமேயாம் என்றும்,
இரண்டும் ஒன்றேயாம் என்றும், ‘மொழிப்பொருட் காரணம்’ (394) என்னும் சூத்திரத்தில்
பொருளொடு சொற்கு இயைதல் இயற்கை ஆகலான் என்றும், ஆறாவதன் சூத்திரத்துத்
‘திரிந்து வேறுபடூஉம்’ (80) என்பதற்கு உதாரணம் எள்ளது சாந்து, கோட்டது நூறு
என்பனவற்றொடு ஒருங்கு ‘சொல்லது பொருள்’ என்பதனையும் காட்டி ‘முழுவதூஉம்
திரிந்த’ என்றும் கூறுவர். இனி நச்சினார்க்கினியர் சத்தநூலாரொடு மாறுபடச்சொல்லை
பொருள் உணர்த்தற்குக் கருவி என்பர். தார்க்கிகர் சுவரூப சம்பந்தம் என்பர். ஆற்றல்
சொல்இயற்கையேயாம், என்று- பிரயோக விவேகம் (18ம் நூற்பாஉரை)

இனிச் சொல்லை நித்தியம் என்றும், அநித்தியம் என்றும் வியாபகம் என்றும்,
ஏகதேசம் என்றும், பொருள் என்றும் பொருள் அன்று என்றும், கடவுள் கட்டினது
என்றும், அறிவாரும் அறியாரும் சாதியாரும் சமயத்தாரும் தேசத்தாரும் காலத்தாரும்
தத்தமக்கு வேண்டியவாறே கட்டினது என்றும், ஒருவரானும் கட்டப்பட்டதன்று தானே
அநாதியாய் உள்ளது என்றும், சொல்லும் பொருரும் சாத்தனது ஆடைபோல வேற்றுமை
என்றும், கோட்டது நூறுபோல ஒற்றுமை யென்றும் அர்த்தநாரீசுவரன்போல
வேற்றுமைக்கும் ஒற்றுமைக்கும் பொது என்றும், இன்னும் பலவாற்றானும் பலரும் கூறுவர்.
அவை நிற்க, இனித்தொல்காப்பியம் ஒருவர்தாமே அச்சொல்லை,