நூற்பா தொல்காப்பிய நூற்பா. உரையின் பெரும் பகுதி சேனாவரையர் உரைத்ததே. அஃறிணைக்கண் தொழிலிற் பிரிந்தனவற்றிற்குக் காட்டும் எடுத்துக்காட்டுக்கள் நச்சினார்க்கினியர் உரைத்தனவே. அதிகாரம்- ஓரிடத்து நின்றசொல் பல் நூற்பாக்களோடு சென்று இயைவதாம். ஈண்டுச் சென்ற நூற்பாவின் ‘உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும்’ என்ற சொற்றொடர் இந்த நூற்பாவிற்கும் அதிகாரத்தான் வருவிக்கப்பட்டதாம். தொடி அணிதலும் வாழ்க்கைப் படுதலும் ஆடவருக்கும் உண்டு. மக்கட்டன்மையும் கட்டில் ஏறுதலும் மகளிருக்கும் உண்டு. எருமைத்தன்மையும் நடத்தலும் முறையே ஆண் எருமைக்கும் ஆண் யானைக்கும் உண்டு. யானைத்தன்மையும் ஓடுதலும் பெண் யானைக்கும் உண்டு. அங்ஙனம் இருப்பவும் ஒன்றனைவிடுத்து ஒன்றனைக்கொள்வதற்குக் காரணம் வழக்காறேயன்றிப் பிறிதுஒன்றும் இல்லை என்பதாம். இந் நூற்பாவில் கூறப்படுவனவற்றிற்கு வழக்காறு தவிர வேற்றுக் காரணம் எதுவும் இன்று என்பது. பெற்றம், கறக்கும், பெற்றம் உழவு ஒழிந்தன என்ற தொடர்களில் கறத்தல், உழுதல் என்ற வினைகளே முறையே காளை, பசு என்பனவற்றை விலக்கிவிட்டன. எனவே இவ்வெடுத்துக்காட்டுக்கள் ‘வினைவேறுபடூஉம் பலபொருள் ஒரு சொற்’கண் அடக்கப்படுவன என்பது. |