இஃது உரிச்சொற்கண் மரபுவழுக் காக்கின்றது. இ-ள்: இரட்டித்து நின்று பொருள் உணர்த்தும் சொற்கள் இரட்டித்து நிற்றலின் பிரிந்து நில்லா என்றவாறு. கொறுகொறுத்தார்- மொறுமொறுத்தார்- எனக் குறிப்புப் பற்றியும், குறுகுறுத்தது- கறுகறுத்தது- எனப் பண்பு பற்றியும், சுறுசுறுத்தது- மொடுமொடுத்தது- என இசை பற்றியும் இரட்டித்துப் பிரியாது நின்றன. இவை குறுத்தது குறுத்தது என்றாற்போல ஒரு சொல்முழுவதும் இருமுறை வாராமையின் அடுக்கு ஆகா. இவை மக்கள் இரட்டையும் விலங்கு இரட்டையும் போல வேற்றுமை இன்றி, இலை இரட்டையும் பூ இரட்டையும் போல ஒற்றுமையும் வேற்றுமையும் உடையவாம்.
குறு என்னும் சொல் அடுத்துக் குறுத்தது என்பது குறுமை மிகுதி உணர்த்திற்றேல் குறு என்பது யாண்டும் மிகுதி உணர்த்தல் வேண்டும்; அஃது உணர்த்தாமையின் இரண்டும் ஒரு சொல்லே ஆயிற்று. |